Pages

Monday, 3 November 2014

வள்ளல் பாரி மகள்கள் அங்கவை,சங்கவை /திருக்கோவிலூரும், கபிலர் குன்றும்

புறநானூற்றைப் புரட்டும்போது இரண்டு பெண்களின் கண்ணீர்க் கதறல் நம்மை கரைந்துருகச் செய்துவிடும். 
அங்கவை, சங்கவை ஆகிய இருவரே அவர்கள்!.
முல்லைக்கு தேர் தந்த வள்ளலாகவும், இந்த இரண்டு பெண்களின் தந்தையாகவும் விளங்கிய பாரிவள்ளல் இறந்ததும், அங்கவையும், சங்கவையும் தாங்கள் அநாதைகளானதை உணர்ந்து, 
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்...
இற்றைத்திங்கள்... குன்றும் கொண்டார் எந்தையும் இலமே.... 
(
புறம் 122 )
என்ற பாடலைப் பாடி தங்களின் கையறு நிலையைப் பதிவு செய்தனர். மாடமாளிகையில் வாழ்ந்த அங்கவையும், சங்கவையும் தமது தந்தையாரின் மறைவுக்குப் பின், அவரது நண்பரான புலவர் கபிலரின் பாதுகாவலில் இருந்தனர்.
நண்பன் பாரியின் மறைவுக்குப் பின் அவன் மகளிரை தன் மகளிராகவே கருதி பாதுகாத்த கபிலர், தக்க அரசர்களை நாடி அப்பெண்களை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.
அவ்வகையில் விச்சிகோன், இருக்கோவேள் என்ற இரு அரசர்களை கபிலர் வேண்டியதை புறநானூறு (200,202 ) தெரிவிக்கிறது. பாரியைக் கொன்ற வேந்தர்களால் தங்களுக்குத் தொல்லை உண்டாகும் என நினைத்தே மற்ற அரசர்கள் பாரி மகளிரை மணக்க முன் வர வில்லை போலும்.
ஓளவையாரால் சேரனின் நண்பனான மலையமான் திருமுடிக்காரியையப் புகழ்ந்து பாடி (புறம் 121 - 24 ) பாரியின் இரு (க்)ளையும் அவன் வழியினர்க்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டுக் கபிலர் வடக்கிலிருந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு (புறம் 236, ஆடிக்குறிப்பு ) உயிர் துறந்தார் என்பதும் நாம் அறிந்த செய்திகளாகும்.
அவ்வாறு கபிலர் உயிர் துறந்த இடம் எது?
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள கபிலர் குன்று (கபிலக்கல் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது ) என்ற இடத்தில் கபிலர் உயிர் துறந்தார் என்று ஆராய்ச்சிகளால் உறுதி செய்துள்ளார் ஆநிரைக் காவலன் என்ற அறிஞர் அவரின் முயற்சிக்குப் பின் தமிழக அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட இடமாக பராமரிக்கப்படுகிறது.
தனித்த பாறையும், அதன் மேல் சிறு கோவில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டிடமும் கொண்டது கபிலர் குன்று. குறுகிய படிக்கட்டுகள் வழியாக இக்குன்றை அடையலாம்.கோயிலின் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல்களால் கட்டப்பட்ட கட்டிடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகூட்டப்பட்டுள்ளது. இக் கட்டிடம் 16 ம் நூற்றாண்டு கட்டிட பாணியைச் சேர்ந்தது என தொல்லியில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேல்புறம் நான்கு பக்க மேல்பகுதிகளிலும் சுவாமி சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேற்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன.

கபிலர் அந்தணர்களிடம் பாரி மகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிலிருந்து உயிர்நீத்தார் என்ற இலக்கியங்கள் குறிப்பிடுகையில், திக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள முதலாம் ராஜராஜசோழன் காலத்து கல்வெட்டில் 'செஞ்பொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி மினல்புகுல் விசும்பின் வீடுபேறேண்ணி அந்த ரிக்க்ஷம் செலகனல் புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது' என்ற தொடர்கள் இடம் பெற்றுள்ளன.

இக்கல்வெட்டின் மூலம் ராஜராஜசோழனின் தாயார் வானவன் மாதேவி மலையமான் குலத்துக்கு வீரட்டானேசுவரர் கோயில் குல தெய்வம் என்பதை அறிய முடிகிறது. 
பல்வேறு போர்கள் நடைபெற்ற சங்க காலம் முதல் இடைக்காலம், பிற்காலம் வரை, வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கிய திருக்கோவிலூரும், கபிலர் குன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய, பார்வையிட வேண்டிய முதன்மையான இடங்களாகும்.
நன்றி: தினமணி நாளிதழ் (26.02.2006)