சென்னை:""இந்திய ஜனநாயக கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க, வரும் சட்டசபை தேர்தலை ஒரு ஊடகமாக பயன்படுத்த உள்ளோம். இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். யாரிடமும் எதற்காகவும் சரணடையவோ, சலனமடையவோ மாட்டோம்,'' என, கட்சியின் நிறுவனர் பச்சமுத்து நிருபர்களிடம் தெரிவித்தார்.
பச்சமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது: இந்த மாதம் பீகாரில் நடைபெறும் சட்சபை தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் 17 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.இவர்கள் பீகாரில் உள்ள முக்கிய கட்சிகளில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள், அதிலிருந்து விலகி எங்கள் கட்சிக்கு வந்துள்ளனர். அவர்களில் முன்னாள் மேயர் ஒருவரும் உள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், தன்னம்பிக்கை மற்றும் சுய பரிசோதனை என்ற முறையில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். விருத்தாசலத்தில் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் குன்னம் தொகுதியில் கல்வியாளர் ஜெயசீலன், அரியலூர் தொகுதியில் கல்வியாளர் பாஸ்கர், தஞ்சாவூர் திருவையாறு தொகுதியில் தொழிலதிபர் முத்துக்குமார், புதுக்கோட்டை தொகுதியில் தொழிலதிபர் சீனிவாசன், நெல்லை தொகுதியில் தொழிலதிபர் மதன், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் ராமகிருஷ்ணன் அல்லது தங்கவேல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.
கேரளாவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் கொல்லம் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இருவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். எதற்காகவும் யாரிடமும் சரணடையவோ, சலனமடையவோ மாட்டோம். அதனால் தான், 6 மாதம் முன்பே தமிழக வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலை ஒரு ஊடகமாக பயன்படுத்தி கட்சியை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பாரி வேந்தர் கூறினார்.