Pages

Thursday, 22 April 2010

உடையார் பாரி வரலாறு -2

`
பாரிவள்ளல் மகள்களாகிய அங்கவை சங்கவைக்குத் திருமணம். ஔவையாரே முன்னின்று நடத்திவைக்கிறார். மணமகன் திருக்கோவலூர் மலையமானாகிய தெய்வீகன்.

விநாயகப் பெருமானிடம் சொல்லி சேர சோழ பாண்டியர்களுக்குத் திருமண அழைப்பு எழுதச ்செய்வித்தார்.

அவர்கள் ஏற்கனவே பாரியிடம் பெண்கேட்டுப் போர் தொடுத்தவர்கள். இரண்டு பெண்கள்; மூன்று பேர் பெண் கேட்டார்கள். எவ்வகையில் பார்த்தாலும் யாராவது ஒரு வேந்தன் போர் தொடுப்பான். அவர்கள் நோக்கம் போரேயன்றி மண உறவல்ல. யாருக்குமே கொடுக்கவில்லையென்றாலும் போர் தொடுப்பார்கள்.
பாரியின் இறப்புக்குப் பின்னர் மூவேந்தர்களும் பறம்புநாட்டை அபகரித்துக்கொண்டார்கள். பாரி மகளிர் அபலைகளாக அநாதைகளாக ஒரு காட்டின் ஓரத்தில் விறகு பொறுக்கி ஜீவனம் செய்துகொண்டிருந்தார்கள்.
ஒருநாள் பெருமழை.
மழையில் நனைந்தவண்ணம் ஔவையார் வழிதடுமாறிச் சென்றபோது பாரிமகளிரின் குடிசை தென்பட்டது. பாரிமளிர் அவரை உபசரித்து, அவருடைய குளிரைப் போக்குவதற்காகத் தங்களிடம் இருந்த ஒரே நீலச்சிற்றாடையைத் தந்து உதவினர்.
?)

அந்த நிலையிலும் ஒரு பாட்டுப் பாடிவிட்டார்.

பாரி பறித்த பறியும், பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் - சேரமான்
வாராயென்றழைத்த வாய்மையும் இம்மூன்றும்
நீலச்சிற்றாடைக்கு நேர்!

.

அவர்கள் யாரென்றறிந்த ஔவையார், தாமே அவர்களின் திருமணத்தைச் செய்விக்கப் போவதாக நிச்சயித்து, திருக்கோவவலூர் மலையமானுக்குப் பேசிமுடித்தார்.
உடனேயே திருக்கோவலூரைத்தாக்குவதற்காக மூவரும் புறப்பட்டார்கள்.
ஔவையார் தன்னந்தனியாக எதிர் சென்று, பூமியைப் பார்த்து இவர்களுடைய சிறுமைக் கண்டு 'சற்றே சிரி' என்று ஈற்றடியாக முடியும் பாடலைப் பாடினார். பூமியும் சிரித்தது. அதாவது மிக ஆழமும் அகலமும் கூடிய பெரும்வெடிப்புக்கண்டது.

அவர்களுக்கு வேண்டிய புத்திமதியைச்சொல்லி அவர்களைத் திருமணத்துக்கு வரச்செய்தார்.

திருமணத்திற்கு வந்துசேர்ந்த மூவெந்தர்களுக்கும் உபசரிப்புச் செய்தாகவேண்டுமே. அப்போது பார்த்து அவர்கள் பனம்பழம் கேட்டார்கள்.
ஸீஸனில்லாத காலம். பனம்பழத்துக்கு எங்கே போவது? வீஐப்பி விருந்தினர் வந்து - அதுவும் மன்னர்கள் கேட்கும்போது கொடுத்தாகவேண்டுமே?
முடியவில்லையானால் அதுவே ஒரு பெரிய அவமதிப்பு ஆகும். அத்துடன் ராஜகௌரவம் கெட்டுவிடும். அதனை வைத்தே போர் தொடுக்கலாம்.

மணப்பந்தல் போட்ட இடத்தின் வெளியே, ஒரு பனந்துண்டம் கிடந்தது. பந்தலுக்காக வெட்டிப்போட்ட மீதி.

அதனைப் பார்த்து ஔவையார் பாடினார் -

திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின்றார், மணப் பந்தலிலே.
சங்கொக்க வெண்குருத்து ஈன்று, பச்சோலை சல சலத்து,
நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!

"பனந்துண்டமே! சந்திரன்போன்ற வெண்கொற்றக்குடையுடைய
சேரனும் சோழனும் பாண்டியனும் திருமணப்பந்தலிலே மணமக்களுக்கு
அறுகிட்டு வாழ்த்துவதற்கு வந்து நின்றார்கள். சங்கைப்போல வெள்ளிய
குருத்து விட்டு, சலசலவென்று பச்சை ஓலை தழைக்கப்பெற்று, நுங்குகளின்
கண்கள் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்ததாக உள்ள பனம்பழங்களை
ஆளுக்கு மும்மூன்று தரக்கடவாய்!"

அவ்வாறே அது தந்ததாம்.